இறந்த தாயின் உடலை 5 நாட்கள் வீட்டிலேயே வைத்து பூஜை செய்த மகன்… பாட்டியை பார்க்க சென்ற பேத்திக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தினமும் ஈரத் துணியால் உடலை துடைத்து, பவுடர் தூவி, வெள்ளைத் துணியால் மூடி வைத்து...
kerala son kept mothers body at home five days
kerala son kept mothers body at home five days
Published on
Updated on
1 min read

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா அருகே உள்ள ரப்பர் தோட்ட எஸ்டேட் குடியிருப்பில் வசித்து வந்தவர் 90 வயதான சின்னத்தம்மா. இவரது மகன் கிருஷ்ணசாமி இவரது மனைவி உயிரிழந்த நிலையில் மகள் திருமணமாகி மாமியார் வீட்டில் வசித்து வருகிறார். எனவே இவர் தாயுடன் தனியாக வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மூதாட்டி சின்னத்தம்மா வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த காரணத்தால் அவரது அன்றாட கடமைகளை செய்ய மகன் கிருஷ்ணசாமி உதவி செய்து அவரை கவனித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை சின்னத்தம்மா உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் அவரது மரணம் குறித்து கிருஷ்ணசாமி உறவினர்களுக்கோ, அக்கம் பக்கத்தினருக்கோ அல்லது காவல்துறையினருக்கோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், தனது பாட்டியை பார்க்க கிருஷ்ணசாமியின் மகள் வீட்டிற்கு வந்தபோது, சின்னத்தம்மாவின் உடல் வீட்டிற்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளத்துப்புழா காவல்துறையினர், வீட்டிற்குள் இருந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பரிப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், தனது தாயின் உயிரிழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனஉளைச்சலில் இருந்த கிருஷ்ணசாமி, கடந்த ஐந்து நாட்களாக அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் உடலில் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க தினமும் ஈரத் துணியால் உடலை துடைத்து, பவுடர் தூவி, வெள்ளைத் துணியால் மூடி வைத்து பூஜை செய்து வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். நெனெடை நாட்களாக தாயுடன் இருந்த காரணத்தால் அவர் மனநல பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறாரா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி, கிருஷ்ணசாமி மிகவும் அமைதியான குணம் கொண்டவர் என்றும், யாரிடமும் அதிகமாக பேசாமல் தனிமையில் வாழ்ந்து வந்ததால், வீட்டில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இறந்த தாயின் உடலை ஐந்து நாட்களாக வீட்டிலேயே வைத்து பூஜை செய்து வந்த இந்த சம்பவம், கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com